ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர்

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,
    திவான் பகதூர் K. சுந்தரம் செட்டியார் ஆவர்கள் சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல்) சேந்தமங்கலத்தில் வசித்து வந்த செல்வந்தர் கிருஷ்ணம்ம செட்டியாருக்கு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி 1875 ஆம் ஆண்டில் பிறந்தவர்.

    இளமையில் படுசுட்டியாக விளங்கிய இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும், பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து F.L.Exam.ல் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராகத் தேர்வாகி கல்வி உதவித் தொகையையும் இவர் பெற்றார். ஆங்கிலேயர்களே கண்டு வியக்கும் வண்ணம் ஆங்கில மொழியில் அதீத ஞானம் பெற்றிருந்தார்.

    சட்டநுணுக்கங்களை அறிந்த இவர் ஒரு சட்ட மேதையாகவே திகழ்ந்தார். சேலத்தில் வழக்கறிஞராக தன் பணியை ஆரம்பித்த இவரின் வாதத்திறமையையும், மதிநுட்பத்தையும் கண்ட ஆங்கிலேயர்கள் இவரை Dist.Munsiff ஆக 1902ல் நியமித்தனர். இந்தப் பதவிக்கு அவர் வந்த போது அவரின் வயது 27 என்றால் அவரின் திறமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

    விரைவாக இவர் Sub Judge ஆகவும், District Judge ஆகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் இவருக்குப் பெறும் புகழைப் பெற்றுத் தந்தன.

    இவரை 1926ஆம் ஆண்டு Commissioner of Election Enquiry Committee யில் தலைமை பொறுப்பில் அரசு இவரை நியமித்தது. இவர் பணிகளுக்கிடையே பல பொதுச்சேவைகளையும் செய்துவந்தார். எனவே இவருக்கு 1927ஆம் ஆண்டில்
    ராவ்பகதூர், திவான் பகதூர் எனப் பட்டத்தை அளித்து அரசாங்கம் இவரை கெளரவித்தது.

    1930 ஆண்டில் அரசு இவரை Officer on Special Duty as a Member of the Council of State, என்று டெல்லிக்கு அனுப்பியது. அதே ஆண்டில் ஜுலை மாதம் இவரை சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளித்தும் தன் கடமையை செய்தது. 1934 வரை நீதிபதியாக பதவிவகித்த இவர் தன் பதவி ஓய்விற்கு பின் சேலத்தில் தன் மகள் வீட்டிலேயே தங்கி பல அறப்பணிகளைச் செய்து வந்தார்.

    திருவண்ணாமலையில் இவர் முனிசீப்பாக பதவி வகித்த போது சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருளைப் பெற்றார் என்கிறார்கள். ஸ்வாமிகள் இவரிடம் தனிப்பாசம் காட்டியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதுபோல் ரமண மகரிஷியிடமும் பக்தி செலுத்தி வந்தார்.

    1935ஆம் வருடம் சேலத்திற்கு அருகில் உள்ள அழகாபுரம் கிராமத்தில் தொற்றுநோய் பரவியபோது தானாக முன்வந்து பெரும் தொகை கொடுத்து அங்கிருந்த சிறு கிணற்றை ஆழப்படுத்தி பெரியதாக்கி அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தார். இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    சேலம் இராமகிருஷ்ணா மிஷனிற்கும், Theosophical Society க்கும் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது தலைவராகத் திகழ்ந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் அளித்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பல நீதிபதிகள் பின்னர் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது நமக்கு மெய் சிலிர்ப்பது நிச்சயம்.

    இவரின் நினைவாக சேலம் வாசவி மஹால் மேல் மாடியில் Justice Sundaram Hall ஐ அவர்கள் குடும்பத்தார் 1962ஆம் ஆண்டில் அர்பணித்திருக்கிறார்கள்.

    இனி இந்த மஹாலுக்கு செல்பவர்கள் ஒரு நிமிடம் நம் சமூகத்திற்கு பெருமைத்தேடித்தந்த அந்த மாமனிதரைப்பற்றி ஒரு கணம் நினைத்துப்பாருங்கள், உங்கள் மனதில் பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

    Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

    VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

    Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group